நாயன்மார்களில் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். கடலுார் அருகிலுள்ள வீராட்டானத்துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவன் அருளால் வயிற்று நோய் நீங்கப் பெற்றார். சிவன் கோயில்கள் எங்கும் தரிசித்து தேவாரப் பாடல்கள் பாடினார். இதை விரும்பாத மகேந்திர பல்லவ மன்னன், சுண்ணாம்புக் காளவாசலில் இட்டும், விஷ உணவு கொடுத்தும், யானையின் காலால் இடறச் செய்தும் துன்புறுத்தினான். ஆனால் சிவனருளால் திருநாவுக்கரசர் உயிர் தப்பினார். கடைசியாக அவரை கல்லில் கட்டி கடலில் வீச ஆணையிட்டான். மனம் கலங்காத நாவுக்கரசர் “கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே,” என்று வீரத்துடன் பாடினார். கல்லே தோணியாக மாறி திருநாவுக்கரசரை தாங்கி நின்று மிதந்தது. நாவுக்கரசர் கரையேறினார். ஆச்சரியமடைந்த மன்னன், மனம் மாறி சிவனடியவராக மாறினான்.