முற்பிறவியில் செய்த பாவத்தால் கொடிய துன்பத்திற்கு ஆளாகி தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்கள் இழந்த நிம்மதியை மீண்டும் பெற்று நலமுடன் வாழ தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் கீசரா குட்டா ராமலிங்கேஸ்வரரை ஒருமுறை தரிசித்தால் போதும். இலங்கையில் நடந்த போரில் வெற்றி பெற்றார் ராமர். மனைவியான சீதையை மீட்டுக் கொண்டு தம்பி லட்சுமணர், அனுமனுடன் அயோத்திக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பசுமை மிக்க மலைப்பகுதியைக் கண்டார். அங்கு தங்கி ராவணனைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்ய விரும்பினார் ராமர். அதற்காக காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பி வைத்தார். குறித்த நேரத்திற்குள் அனுமன் வரவில்லை. அப்போது சிவபெருமானே நேரில் காட்சியளித்து லிங்கம் ஒன்றை ராமருக்கு கொடுத்தார். மகிழ்ந்த ராமர் சிவபூஜையை நடத்தி மகிழ்ந்தார். அந்த நேரத்தில் 101 சிவலிங்கங்களை ஏந்தியபடி அனுமன் வந்து சேர்ந்தார். சிவபூஜை முடிந்ததைக் கண்ட அனுமனுக்கு கோபம் ஏற்பட்டது. கையில் இருந்த 101 சிவலிங்கங்களையும் வீசி எறிந்தார். அவை இக்கோயிலைச் சுற்றி பல இடங்களில் விழுந்தன. அந்த இடமே மலைப்பகுதியான கேசரி குட்டா. அனுமனின் கோபத்தை தணிக்க விரும்பிய ராமர், ‘‘கேசரியின் மகனான அனுமனே! இந்த மலைப்பகுதி இனி உன் வம்சத்தின் பெயரால் கேசரிகுட்டா என இருக்கட்டும்’’ என்று வரம் அளித்தார். தற்போது ‘கீசர குட்டா’ என மருவி விட்டது. மலைக்குன்றின் உச்சியில் கம்பீரமாக கோயில் காட்சியளிக்கிறது. நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான அனுமன் பக்தர்களை வரவேற்கும் விதமாக நிற்கிறார். மூலவர் ராமலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். வெளிமண்டபத்தில் நின்ற கோலத்தில் பவானி, சிவதுர்க்கை அம்மன்கள் உள்ளனர். லட்சுமி நரசிம்மர், சீதாதேவி, ராமர், விநாயகர், சுப்ரமண்யருக்கு சன்னதிகள் உள்ளன. சிவனும், ராமரும் ஒரே இடத்தில் அருள்புரியும் இக்கோயிலை தரிசித்தால் கவலை பறந்தோடும். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் சிவன், அம்மனுக்கும் அபிேஷகம் செய்து புது வஸ்திரம் சாத்துகின்றனர். எப்படி செல்வது: * ஐதராபாத்தில் இருந்து 35 கி.மீ., * செக்கந்திராபாத்தில் இருந்து 30கி.மீ.,