பதிவு செய்த நாள்
09
பிப்
2021
12:02
மேட்டுப்பாளையம்: யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று துவங்கியது; 26 யானைகள் பங்கேற்றுள்ளன.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 13வது ஆண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், தேக்கம்பட்டியில், பவானி நதியோரம் நேற்று துவங்கியது.மொத்தம், 48 நாட்கள் நடக்கும் முகாமில், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, கோவில்கள் மற்றும் திருமடங்களில் வளர்க்கப்படும் யானைகள் பங்கேற்றுள்ளன. விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த பின், அமைச்சர்கள், யானைகளுக்கு கரும்பு, பழங்களை வழங்கி, நலவாழ்வு முகாமை துவக்கி வைத்தனர்.ஸ்ரீரங்கம் - ஆண்டாள், மதுரை மீனாட்சி கோவில்- பார்வதி, கள்ளழகர் கோவில் - சுந்தரவள்ளி, பழநி - கஸ்துாரி, திருச்செந்துார் - தெய்வானை, ராமேஸ்வரம் - ராமலட்சுமி, புதுச்சேரி மணகுள விநாயகர் கோவில் - லட்சுமி உட்பட, 26 யானைகள் பங்கேற்றுள்ளன.ஓராண்டு இடைவெளிக்குப் பின் சந்தித்த யானைகள், ஒன்றுக்கொன்று அன்பை பரிமாறி, குதுாகலத்துடன் காணப்பட்டன.