ராமேஸ்வரம்: தை அமாவாசையை யொட்டி நாளை ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை அதிகாலை 2:30 மணிக்கு நடை திறந்து அதிகாலை 3:30 முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். தொடர்ந்து கால பூஜை நடக்கும்.காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து ராமர், சீதை, லெட்சுமணர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருள்வார். ராமருக்கு தீபாராதனை நடந்ததும் தீர்த்தவாரி நடக்கிறது. அதைத்தொடர்ந்து முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிய பக்தர்கள் திதி பூஜை, தர்பணம் செய்து அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவர். பக்தர்கள் வசதிக்காக நாளை பகல் முழுவதும் கோயில் திறந்திருக்கும். அன்றிரவு ராமரின் வெள்ளி ரத வீதி உலா நடக்கும் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.