பதிவு செய்த நாள்
11
பிப்
2021
01:02
தஞ்சாவூர் : அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு நடந்த நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிராதேவி கோவில் அமைந்துள்ளது. எட்டுத்திக்கும் மயானத்தில் சூழப்பட்ட இந்த கோவிலில் ராவணன் மகன் மேகநாதன் பஞ்சபாண்டவர்கள் பூஜித்து வேண்டிய வரங்களைப் பெற்றுள்ளனர். இக்கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு மனமுருக அம்பாள் பிரார்த்தித்தால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நிகும்பல யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு அம்பாளை கோவில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு ஜெபங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நிகும்பலா யாகம் நடைபெற்றது. 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சரியாக ஒரு மணிக்கு கோவிலின் தலைமை அர்ச்சகர் தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றலை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார்.
தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம், பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் மயிலாடுதுறை திமுக எம்பி ராமலிங்கம், திருவிடைமருதூர் திமுக எம்எல்ஏ செழியன் உட்பட பல திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட திரளானோர் நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.