பதிவு செய்த நாள்
17
பிப்
2021
02:02
திருப்பூர்: கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழமை வாய்ந்தது. மேற்கு நோக்கிய சிவாலயம் அமைந்துள்ள சிறப்பு பெற்ற கோவிலில், இக்கோவில். சுந்தரர் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய இத்தலத்தில், மாசி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. அவ்வகையில், 20ம் தேதி இரவு கிராமசாந்தியும், 21ம் தேதி காலை கொடியேற்றமும் நடைபெறுகிறது.
22ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சி, 23ல் பூதவாகனம், சிம்மவாகன காட்சி, 24ல் புஷ்ப விமானகாட்சி, 25ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ரிஷப வாகன காட்சி நடக்கிறது.விழாவில், வரும், 26ல், திருக்கல்யாண உற்சவம், 27ம் தேதி அதிகாலை, திருமுருகநாதர் தேரில் எழுத்தருளும் நிகழ்ச்சியும், மதியம், 2:00 மணிக்கு மூன்று தேர்களை வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஒரே நாளில், மூன்று தேர்களும் நிலையை வந்தடைகின்றன.மறுநாள், பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்மவாகன காட்சி, தெப்பத்தேர் உற்சவமும் நடக்கின்றன. மார்ச் 1ம் தேதி சுந்தரர் வேடுபறி திருவிழாவும், 2ம் தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சியும் நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், இரவு மயில் வாகன காட்சியுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.கலை நிகழ்ச்சி இல்லைகொரோனா தொற்று பரவலை தடுக்க, பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், விழாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள், ராட்டிணம் போன்றவை அமைக்க அனுமதியில்லை. கோவில் வளாகத்தில், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை.மண்டப கட்டளை மட்டும், கோவில் வளாகத்தில் நடக்கும். ஆன்மிக கலை நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.