நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து விரதம் துவங்கினர்.
நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று அதிகாலை முதல் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் கோயில் அருவியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து, நத்தம் சந்தனக்கருப்பு சுவாமி கோயிலை அடைந்தனர். நத்தம் மாரியம்மன் கோயில் நிர்வாகத்தினர் மேளதாளம் முழங்க சந்தன கருப்பு சுவாமி கோயில் சென்று தீர்த்தம் அழைத்து வந்தனர். பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் துவங்கினர். அடுத்தடுத்து முக்கிய நாட்களில் அம்மன் சிம்மம், மயில், அன்ன வாகனங்களில் நகர்வலம் செல்வார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 2 அன்று அதிகாலை முதல் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்துவர். பகலில் கழுமரம் ஏற்றம், மாலை பூக்குழி இறங்கும் நகழ்ச்சி நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டு, இரவு பூப்பல்லக்கில் நகர்வலம் சென்று மறுநாள் அதிகாலை அம்மன் சன்னதி அடைவதுடன் விழா நிறைவடையும்.