பதிவு செய்த நாள்
17
பிப்
2021
04:02
பெங்களூரு : உலகையே வாட்டி வதைத்த, கொரோனா தொற்று தொடர்பாக, கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி கூறிய ஆரூடம் பலித்துள்ளது.
ஓராண்டாக, கொரோனா தொற்று, உலகையே அச்சுறுத்தியது. கர்நாடகாவில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு பலியாகினர்.தற்போது படிப்படியாக குறைந்து வருவதால், மக்களின் வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்புகிறது. மக்களும் பயத்தை விட்டு விட்டு, தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடுகின்றனர்.கொரோனா தொடர்பாக, கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி கூறிய ஆரூடம் பலித்துள்ளது.
2020, மார்ச்சில், கர்நாடகாவில், கொரோனா கால் வைத்த போது, அவர் கூறியதாவது: மருந்து இல்லாத நோய்க்கு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பர். வரும் நாட்களில், தென்படும் நோய், வெறும் மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல, உயிரற்ற ஜட பொருட்கள் மூலமாகவும் பரவும்.மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும். மனிதன் எண்ணெய் இல்லாமல், எரிய வைத்துள்ளான். பறவைகள் இறக்கை இல்லாமல் பறந்துள்ளன.மனிதன், கடவுளை விட பெரியவனல்ல. தெய்வ சக்தி கோபித்தால், அசம்பாவிதம் நிகழும். மனிதனின் எந்த முயற்சியும் பலனளிக்காது.ரிஷிகள், முனிவர்கள், யோகிகள் தவ வலிமையால், பாதுகாத்து வந்த பூமி நம்முடையது. எனவே, கொரோனா போன்ற நோய்களுக்கு, இந்தியர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.சில மாதங்கள் கொரோனா தீவிரமாக இருக்கும். கிராமங்களிலும் பரவும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசின் விதிமுறையை, யாரும் மறக்கக்கூடாது.ஜனவரி, பிப்ரவரியில் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. ஆனால் உகாதி பண்டிகை வரை, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறியிருந்தார். அவர் கூறியது போன்றே, ஜன., பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைகிறது.