அபூதல்ஹா என்னும் தோழரை அழைத்த நாயகம், அருகில் நின்ற ஏழை ஒருவருக்கு உணவளிக்கச் சொன்னார். அவரும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘‘நம் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினரின் பசி போக்க என்ன இருக்கிறது’’ என மனைவியிடம் கேட்டார். ‘‘பிள்ளைகளுக்கு தேவையான உணவு மட்டுமே இருக்கிறது’’ என்றார் மனைவி. “குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி தட்டிக் கொடுத்து துாங்க வை. உணவு குறைவாக இருப்பதால் விருந்தினர் சாப்பிட அமர்ந்ததும் விளக்கை அணை” என்றார் அபூதல்ஹா. உணவு வைத்ததும் சரி செய்வது போல் விளக்கை அணைத்தார். இருட்டில் ஒன்றும் தெரியாததால் தட்டில் வைத்ததை சாப்பிட்ட ஏழை புறப்பட்டார். அன்றிரவு அபூதல்ஹா குடும்பத்தினர் பட்டினியோடு உறங்கினர். விடிந்ததும் நாயகத்தைப் பார்க்கச் சென்றார் அபூதல்ஹா. மலர்ந்த முகத்துடன் வரவேற்ற நாயகம் அருகில் அமர வைத்தார். அங்கிருந்தவர்களுக்கு காரணம் புரியவில்லை. “நேற்றிரவு நடந்த சம்பவத்தை இறைவன் நேரில் கண்டு வியந்துள்ளான். குடும்பத்தினர் கூட சாப்பிடாமல் விருந்தினருக்கு உணவு வழங்கிய தங்களுக்கு சுயநலம் சிறிதுமில்லை. உங்களைப் போன்ற நல்லவர்களே மேன்மையானவர்கள்’’ என்றார். அபூதல்ஹாவுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.