ஒருநாள் ஆயிஷா சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நாயகம் தன் மகள் பாத்திமாவை அருகில் அழைத்து, அவளது காதில் ரகசியம் கூறினார். அதை கேட்ட பாத்திமாவுக்கு கண்ணீர் பெருகியது. நாயகம் மீண்டும் அவளது காதில் மற்றொரு ரகசியம் கூறினார். அதனை கேட்டதும் வாய் விட்டு சிரித்தார். ஆயிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் ஏன் அழுகை வந்தது. இப்போது ஏன் சிரிப்பு வந்தது என யோசித்தார். எனினும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. நாட்கள் கடந்தன. நாயகம் உடல் நலமின்றி மரணம் எய்தினார். சில நாள் கழிந்த பின் ஆயிஷா, “அன்று நாயகம் உனக்குச் சொன்ன ரகசியம் என்ன? எதற்காக அழுதீர்கள்? எதற்காக பின்னர் சிரித்தீர்கள்?” எனக் கேட்டார். ரகசியத்தை வெளிப்படுத்தினார் பாத்திமா. “அன்று தந்தையார் இரண்டு ரகசியங்களை எனக்குச் சொன்னார். முதலில் அவரது மரணகாலம் நெருங்கி விட்டது என்றார். அதனை கேட்டதும் அழுகை வந்தது. அதன் பின் ‘மரணித்த பிறகு நான் சந்திக்கப் போகும் நபர்களில் நீயே முதன்மையானவள். சுவனவாசிப் பெண்களுக்கு நீயே தலைவியாக இருப்பாய்’ என்றார். இதை கேட்டதும் சிரித்தேன்” என்றார்.