பதிவு செய்த நாள்
22
பிப்
2021
02:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. வரும், 24ம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 27ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்காக குண்டம் வளாகத்தில் புதர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நின்று குண்டம் திருவிழாவை காண, தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது.மேலும், பக்தர்கள் வளாகத்துக்கு வெளியில் நின்று, குண்டம் இறங்கும் நிகழ்வை காண, டிரோன் கேமரா பயன்படுத்தி நேரலை காட்சிகளை, எல்.இ.டி., திரைகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.பல இடங்களில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளனர். கோவில் வளாகம், குண்டம் இறங்குமிடத்தில், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி, மருத்துவக்குழுக்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல இடங்களில் மொபைல் டாய்லெட் வைக்கவும், பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் கால அட்டவணை வைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.