பதிவு செய்த நாள்
24
பிப்
2021
11:02
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவில் உள்ளது. கந்தபெருமான், சுயம்பு மூர்த்தியாகவும், மும்மூர்த்தி அம்சமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்மாதந்தோறும், பரணி கிருத்திகை, சஷ்டி, விசாகம் நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல், ஆண்டுதோறும், மாசி மாதம், முக்கிய விழாவாக பிரம்மோற்சவ பெருவிழாவும் நடைபெறுகிறது.
இந்தாண்டுக்கான பெருவிழா, கடந்த, 17ல் துவங்கியது. கந்தபெருமான், கிளி வாகனம், வெள்ளி அன்ன வாகனம், மயில் வாகனம், யானை வாகனம் என, வெவ்வேறு வாகனங்களில், கந்த பெருமான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், முக்கிய விழாவாக, ஏழாம் நாள் உற்சவமான தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. காலை, 6:00 மணியளவில், உற்சவர் கந்தனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, விசேஷ அலங்காரத்தில் கந்தபெருமான், பக்தர்கள் வெள்ளத்தில் தேரடிக்கு புறப்பட்டு வந்தார். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சிறப்பு அலங்காரத்தில் கந்தபெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து, காலை, 11:15 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், கந்தா, சண்முகா, முருகா என கோஷங்கள் எழுப்பி, தேரை வடம்பிடித்து இழுத்தனர். பகல், 3:00 மணியளவில் தேரடிக்கு வந்தது. விழாவை ஒட்டி, மாட வீதி பகுதிகளில் நீர், மோர், அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும் வகையில் கண்ணகப்பட்டில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தி, தாம்பரம், சென்னை பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்றைய விழாவில், திருப்போரூர் பகுதிகள் மட்டுமின்றி, பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.