பதிவு செய்த நாள்
24
பிப்
2021
04:02
தஞ்சாவூர், மாசிமகத்தை முன்னிட்டு, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இன்று விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமகத்திற்கு உள்ள கோவில்களில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் முதன்மையானது. ஒவ்வொரு ஆண்டும் மாசிமகமும், 12 ஆண்டுக்கு ஒரு முறை மகாமகமும் சிறப்பாக வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு மாசிமக விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 21ல், அறுபத்தி மூவர் நாயன்மார்களின் வீதியுலாவும், 22ல் தேதி ஓலைச்சப்பரமும் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம், ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து நாளை (25-ம்தேதி) காலை சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மாலை சண்டீகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நாளான 26ம் தேதி காலை 9 மணிக்கு, விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட மாசிமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி - அம்பாள் விதியுலா புறப்பட்டு, மகாமக குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மதியம் 12.30 மணிக்கு மகாமக குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.