ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சேதமடைந்த ஸ்படிகலிங்கத்திற்கு பதிலாக சிருங்கேரி மடம் சார்பில் புதிய ஸ்படிகலிங்கம் வழங்கப்பட்டது.
ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி கருவறையில் உள்ள பழமையான ஸ்படிகலிங்கம் பிப்.,22ல் கோயில் குருக்கள் கவனக்குறைவால் சேதமடைந்தது. பிப்.,23, 24ல் கோயிலில் காலை 4:00 முதல் 5:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை ரத்தானது.கர்நாடகா சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் புதிய ஸ்படிகலிங்கம் வழங்க முடிவு செய்தார். சிருங்கேரி மடத்தின் நிர்வாகிகள் சீதாராம்தாஸ், கிருஷ்ணமூர்த்தி, ராமேஸ்வரம் சிருங்கேரி மடம் மேலாளர் மணிகண்டி நாராயணன் ஆகியோர் 10 இன்ச் நீளம், 4 இன்ச் உயர ஸ்படிக லிங்கத்தை நேற்று மாலை கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் வழங்கினர்.இதனை கோயில் காசிவிஸ்வநாதர் சன்னதி முன்பு கோயில் குருக்கள் யாகம் செய்து, சுவாமி சன்னதி கருவறையில் வைத்து பிரதிஷ்டை செய்தனர். இந்த ஸ்படிகலிங்கத்திற்கு இன்று முதல் காலையில் வழக்கம் போல் பூஜை நடக்கும், பக்தர்கள் தரிசிக்கலாம் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.