பதிவு செய்த நாள்
25
பிப்
2021
01:02
உத்திரமேரூர்; உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், சாலவாக்கத்தில், 11ம் நுாற்றாண்டை சார்ந்த அரிய சதிகல் ஒன்றை கண்டெடுத்தனர். உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் மற்றும் பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், நேற்று முன்தினம், கள ஆய்வு மேற்கொண்டனர்.
போலீஸ் நிலையம் அருகே, பிள்ளையார் கோ வில் வளாகத்தில், சதி கல் ஒன்றை கண்டெடுத்தனர்.இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:சதிகல் என்பது, தன் இனக்குழுவுக்காக, ஊரை காக்கவோ, போர் அல்லது வேட்டையின் போதோ, ஒரு வீரன் இறந்து விட்டால், அவரின் மனைவி, இறந்த கணவரின் உடலோடு தீ மூட்டி, ஊரார் முன் தன் உயிரை மாய்த்துக் கொள்வார்.இவ்வாறு உயிர் நீத்த, இருவரின் நினைவாக நினைவுக்கல் எழுப்பி, கிராமத்தினர் வழிபட்டு வருவர். இதற்கு சதிகல் என பெயர்.சாலவாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட சதிகல், 11ம் நுாற்றாண்டை சார்ந்தது. 1.5 அடி உயரம் மற்றும் அகலம் கொண்டது. இதில், வீரன், மனைவிக்கு இடையில், ஓர் அழகிய மரம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நடுகல் மற்றும் சதிக்கற்களில், இதுவரை மரம் இடம் பெற்றதாக தகவல் இல்லை. இது, அரிதான சிற்பம்.இவ்வாறு அவர் கூறினார். சாலவாக்கத்தில், அரிதாக கண்டெடுக்கப்பட்ட சதி கல்லை பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.