திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நாளை பகல் மற்றும் இரவில் மாசித் தெப்பம் வலம் வருதல் நடைபெறுகிறது. இன்றுபகலில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் மாசித் தெப்பஉத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.18 ல் துவங்கிய உற்சவத்தில் தினசரி காலை, இரவில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.நேற்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி வலம் வந்தார். இன்று காலை 7:00 மணிக்கு குழந்தை கண்ணன் கோலத்தில் வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து தெப்பக்குளக்கரை மண்டபம் நோக்கு திருவீதி உலா புறப்படும்.வழியில் பக்தர்கள் வழிபாடு நடைபெறும். மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் காலை 12:00 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். பின்னர் இரவு 9:30 மணி வரை மண்டபத்தில் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிப்பார். பின்னர் திருவீதி புறப்பாடு நடைபெறும். நாளை காலை 6:30 மணிக்கு தங்கப் பல்லக்கில் பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவியருடன் தெப்பக்குள மண்டபத்திற்கு திருவீதி புறப்பாடு துவங்கும். வழியில் பக்தர்கள் பட்டு சார்த்துதலும், அர்ச்சனை வழிபாடும் நடைபெறும். காலை 10:50 மணிக்கு பெருமாள் தெப்பம் எழுந்தருளலும், தொடர்ந்து குளத்தை வலம் வருதலும் நடைபெறும். மீண்டும் தெப்பம் மண்டபம் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 9:00 மணிக்குமீண்டும் தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி தெப்பம் வலம் வருதல் நடைபெறும். பிப்.28 காலையில் தீர்த்தவாரியும், மாலையில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.