ஸ்ரீமுஷ்ணம்; கிள்ளையில் நடந்த மாசிமக தீர்த்தவாரிக்குச் சென்ற பூவராக சுவாமிக்கு ஸ்ரீமுஷ்ணம் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசிமக உற்சவம் கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 25ம் தேதி வரை உள்ளூரில் நடந்த அனைத்து உற்சவங்களிலும் தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது.26ம் தேதி ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து புறப்பட்ட பெருமாளுக்கு 27ம் தேதி கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.தீர்த்தவாரி முடிந்து, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு கொண்டு வரப்பட்ட சுவாமிக்கு, மங்கள இசை முழங்க பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.வழக்கமாக கிள்ளையில் தீர்த்தவாரி முடித்த பின் கானுார், நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, ராமாபுரம், கவரப்பாளையம் வழியாக வரும் 12ம் தேதி பெருமாள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வரவேண்டும்.ஆனால், கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக மற்ற ஊர்களுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் கிராமங்களுக்குச் செல்லாமல் 10 நாட்கள் முன்பாகவே நாச்சியார்பேட்டையில் இருந்து நேராக ஸ்ரீமுஷ்ணத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நரசிங்கபெருமாள், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பூமாலை சண்முகம் ஆகியோர் செய்திருந்தார்.