குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதன் அவசியத்தை நாயகம் வலியுறுத்துகிறார். சேட்டை செய்யும் குழந்தைகள் மீது அண்டை வீட்டார் புகார் செய்வதுண்டு. ‘அம்மா! உங்கள் குழந்தையை கண்டியுங்கள். எங்கள் வீ்ட்டுத் தோட்டத்தில் கல்லைத் துாக்கி வீசுறான். விளையாடும் போது மற்ற குழந்தைகளை அடிக்கிறான்’’ என்று சொல்வர். ஒரு இளைஞன் தன்னுடன் படிக்கும் மாணவியைக் கேலி செய்யும் போது, ‘‘பொறுப்பு இன்றி இவனது பெற்றோர் இப்படி முள் மரமாக வளர்த்து விட்டார்களே’’ என விமர்சனம் செய்வர். வாழும் காலத்தில் மட்டுமல்ல...இறந்த பிறகும் கூட மகன் செய்யும் தவறுக்கு பெற்றோரை உலகம் குறை சொல்லும். ‘‘தாயும், தந்தையும் ஒழுக்கமாக இருந்தால் தானே மகன் தவறு செய்யாமல் இருப்பான்’’ என்று சொல்வர். இறந்த பின் உலக ரீதியான தொடர்புகளும் அற்றுப் போகும். ஆனால் மூன்று விதமான செயல்கள் இறந்த பின்னும் தொடர்கின்றன. அவை செய்த தர்மம், படித்த கல்வி, பேர் சொல்லும் பிள்ளைகள் நிழல் தரும் மரங்களை நட்டால் உலகமே பயன் பெறும். படிப்பதால் நமக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் நன்மை கிடைக்கும். பிள்ளைகள் நற்பண்புடன் வளர்ந்தால் வாழும் போதும், மறைந்த பின்னும் பெற்றோருக்கு பெருமை சேரும்.