விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு 1 லட்சம் வாழைப்பழ அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2021 06:03
திருவாரூர்: ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 40வது பீடாரோஹண மகோத்சவத்தை முன்னிட்டு ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு 1 லட்சம் வாழைப்பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ளது ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில். இக்கோயிலில் ஸ்ரீP லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இடு ப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி மங்களம் உண்டாகும். இந்த கோயிலில் ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீ வித்யாபீடத்தின் 33வது பீடா திபதியான ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 40வது பீடாரோஹண மகோத்சவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு விஸ்வரூப ஸ்ரீ சங்க டஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 1 லட்சம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மகா சுவாமிகள் தனது திருக்கரங்களால் மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சிதம்பரம், கும்பகோணம், ஆலங்குடி உள்ளிட்ட 12 திருக்கோயில்களின் கொண்டு வரப்பட்ட பிரசாதங்களை சிவாச்சாரியார்கள் மகா சுவாமிகளிடம் வழங்கினர். பின்னர் மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் ரமணி அண்ணா ஆலோசனை படி மடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமௌலி செய்திருந்தார்.