பதிவு செய்த நாள்
02
மார்
2021
06:03
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே சிவன் சன்னதியில்,48 நாட்களாக நல்ல பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அக்கரைவட்டம் தெற்கு கிராமத்தில், பொதுவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த பொங்கல் தினத்தன்று, சிவன் சன்னதியில் நல்ல பாம்பு ஒன்று புகுந்து சாமி படுத்துக்கொண்டது.
கோவிலுக்கு வந்த பூசாரி, சாமி சன்னதி முன்பு பாம்பு படுத்து இருப்பதை பார்த்து, அதை வெளியில் விரட்டி விட முயன்றுள்ளார். ஆனால், அந்த பாம்பு வெளியேறாமல் தனது தலையை துாக்கி பார்த்து விட்டு, மீண்டும் சன்னதியில் படுத்துக்கொண்டது. இருப்பினும், பூசாரி தினமும் வழக்கம் போல, பூஜைகளை செய்து வருவதும்,போவதுமாக இருந்துள்ளார். பாம்பிற்கு பால் வைத்துள்ளனர். ஆனால் அதை பாம்பு எடுத்துக்கொள்ளவில்லை. இப்படியாக இன்று(02ம் தேதி) வரை 48 நாட்களாக பாம்பு சாமி சன்னதியில் இருக்கும் தகவலை கேள்விபட்ட பக்தர்கள், கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்து பரவசமடைந்தனர். இது குறித்த கோவில் பூசாரி கூறியதாவது; பாம்பு எந்த உணவும் எடுத்துக்கொள்ளாமல், சாமி சன்னதியில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் படுத்து கிடக்கிறது. வரும் சிவராத்திரி வரை பார்த்தால் தான் என்ன நடக்கிறது என தெரியும் என்றார்.