பதிவு செய்த நாள்
02
மார்
2021
06:03
சேலம்: சேலம், அப்பா பைத்திய சுவாமி கோவிலில், புதுச்சேரி மாஜி முதல்வர் ரங்கசாமி, நேற்று இரண்டு மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். புதுச்சேரியில், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், விரைவில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில். என்.ஆர்.,காங்.,-– பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மதியம் தன் காரில் புதுச்சேரியில் இருந்து சேலம் வந்த மாஜி முதல்வர் ரங்கசாமி, சேலம் சூரமங்கலத்தில் உள்ள, அப்பா பைத்திய சுவாமி கோவிலில் மதியம், 1:50 மணிக்கு தன் தரிசனத்தை துவக்கினார். பின்னர் மூலவர் சன்னதியில், 2:00 மணி முதல், 3:00 மணி வரை, தியானத்தில் ஈடுபட்ட அவர், கோவிலை வலம் வந்து மாலை, 4:00 மணிக்கு கையில் சில பேப்பர்களுடன் காரில் புறப்பட்டு சென்றார். இன்று புதுச்சேரியில் இருந்து, மீண்டும் சேலம் வந்து, அப்பா பைத்திய சுவாமியை தரிசனம் மேற்கொள்ள உள்ளார். அவரை தொடர்ந்து நேற்று மாலை, 5:00 மணிக்கு புதுச்சேரி வில்லியனுாரை சேர்ந்த, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் விஜயலட்சுமி, கட்சியினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.