பதிவு செய்த நாள்
02
மார்
2021
06:03
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ், கிழக்குரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இன்று (மார்ச் 2) திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
பிப்.,12 முதல் மார்ச் 4 வரை மாசித்திருவிழா நடக்கிறது. பிப்.,16 அன்று நள்ளிரவு அலங்கரிக்கப் பட்ட திருக்கம்பம் கோயில் முன்பகுதியில் நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். பிப்.,24 முதல் சிம்ம, வெள்ளி ரிஷப, யானை, தங்கக் குதிரை வாகனங்களில் மாரியம்மன் திருவீதிவுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 4:30 மணிக்கு மார்கண்டேயன் கோயிலில் இருந்து திருக்கல்யாணத்திற்கு பொட்டும், காரையும் கொண்டு வரப்படும். மாரியம்மன் உற்சவருக்கு இரவு 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும்.நாளை (மார்ச் 3) அதிகாலை அம்மன் கொலுவிருத்தல், காலை 9:00 மணிக்கு பாதிரி பிள்ளையார் கோயிலில் தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மதியம் 3:00க்கு மேல் 4:30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.மார்ச் 4ல் அதிகாலை 3:00 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல், இரவு 10:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெற உள்ளது.