‘நல்ல விஷயங்களே என் வாழ்வில் நடக்க வேண்டும்’ என ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். இது தவறல்ல. ஆனால் இதே நினைப்பு மற்றவர்கள் விஷயத்தில் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் யாரிடமும் இருப்பதில்லை. திருமண விழாவில் பங்கேற்பவர்கள் ‘மணமக்கள் பல்லாண்டு வாழ வேண்டும்’ என மனதார நினைப்பதில்லை. ஏதோ கடமையாக மணமேடையில் வரிசையில் நின்று வாழ்த்தி விட்டு நகர்கிறார்கள். ‘‘எனக்கு நோய் வரட்டும், நான் கடன்சுமையில் கஷ்டப்பட தயாராக உள்ளேன்’’ என்றெல்லாம் யாராவது சொல்வார்களா? ‘‘என்னிடம் பணம் குவியட்டும், நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். என் குழந்தைகள் நன்றாக படிக்கட்டும்’’ என்று தானே நினைக்கிறோம். இதே எண்ணம் மற்றவர் விஷயத்திலும் நமக்கு இருக்க வேண்டும். ‘‘தான் விரும்பியதை தன் அண்டை வீட்டுக்காரனுக்கும் விரும்பும் வரை ஒருவன் ஈமான் கொண்டவனாக ஆக முடியாது’’ என்கிறார் நாயகம்.