பதிவு செய்த நாள்
13
மார்
2021
12:03
பல்லடம்: பக்தி உள்ளவர்களின் கண்களுக்கு கல்லிலும் கடவுள் தெரிவார் என, காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்தார். பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கு உள்ளும் இறைவன் இருக்கிறார். பக்தி உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொண்டு மனதால் நினைத்தால் இறைவன் காட்சி அளிப்பார். உடம்பில் உள்ள இறை சக்தியை நாம் சரியாக பயன்படுத்தாவிட்டால் பிறவி எடுத்ததே வீண். தனக்குள் இருக்கும் சக்தியை மனிதர்களை வியாபித்து வெளியே கொண்டு வர வேண்டும். கோவில்களுக்கு வந்தால் தர்மம் செய்யுங்கள். வருமானம் ஈட்டுவதற்காக கோவில் கட்டப்பட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். புன்னியம் செய்திருந்தால் மட்டுமே கோவிலுக்கு வரும் பாக்கியம் கிடைக்கும். சிவராத்திரியன்று நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இதனால், எதிர்கால வாழ்க்கையின் நிலை மாறும்.
அண்டை மாநிலமான கேரளாவில் வேஷ்டி அணிந்து சென்றால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி. இங்கு, அரைகுறை உடை அணிந்து கோவிலுக்கு வருகின்றனர். பெண்கள் கூந்தலை அள்ளி முடிய வேண்டும். ஆதீனங்களான நாங்களே சிவராத்திரி அன்று மட்டுமே கூந்தலை அவிழ்த்த நிலையில் வைத்திருப்போம். பஞ்சபூத சிலைகள் கொண்ட சிறப்பு பெற்றது தமிழகம். 18 சித்தர்கள், 63 நாயன்மார்கள், 12 வாழ்வார்கள் என அனைவரும் இங்குதான் பிறந்துள்ளனர். இவ்வளவு பண்பாட்டு சிறப்பு பெற்ற தமிழகத்தில், அநாகரீக செயல்கள் அதிகரித்து வருகின்றன. இறைவனை வழிபடுவது ஒன்றை இவற்றிலிருந்து விடுபட வைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நான்கு கால வேள்வி பூஜைகள், தீர்த்த கலச அபிஷேகம், மற்றும் சிறப்பு வேள்வி வழிபாடுகள் நடந்தன. எண்ணற்ற பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்தபடி வழிபாடு மேற்கொண்டனர். மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், இதையடுத்து, அதிகாலை, 4.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.