பதிவு செய்த நாள்
14
மார்
2021
11:03
ஓசூர்: தளி அடுத்த தேவரபெட்டா மலை கிராமத்திலுள்ள மல்லேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த தேவரபெட்டா மலை கிராமத்தில், பழமையான மல்லேஸ்வர சுவாமி மற்றும் ருத்ர முனேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா பொதுமக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர். அதேபோல், தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டை - கல்லுப்பாலம் இடையே உள்ள, மஹதேஸ்வரா சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி நேற்று, எருது விடும் விழா நடந்தது. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.