லிங்க திருமேனி மீது சூரிய ஒளி: அவிநாசி கோயிலில் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2021 12:03
அவிநாசி:அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று சூரிய ஒளிக்கற்றை பாய்ந்து மூலவர் அவிநாசிலிங்கேஸ்வரர் பொன் போல் ஜொலித்தார்.
கொங்கு மாவட்டத்தில் உள்ள ஏழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதி மற்றும் பங்குனி முதல் வாரத்தில் லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக சூரியன் உதயமானதும் படிப்படியாக ஒளிக்கற்றை கோவிலுக்குள் ஊடுருவி மூலவர் மீது விழுந்தது. நேற்று காலை 6:45 மணிக்கு ஒளிக்கற்றை பாய்ந்து பொன்னாக மின்னிய அவிநாசியப்பரை தரிசித்த பக்தர்கள் அவிநாசியப்பருக்கு அரோகரா என பக்திப்பரவசம் பொங்க கோஷமிட்டனர்.கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில் உத்தராயண புண்ணிய காலத்தில் சூரிய பகவான் வடக்கு நோக்கி நகர்கிறார். பங்குனி முடிந்து சித்திரை மாத துவக்கத்தில் இருந்து ராசி மண்டலத்தில் புதிய பயணத்தை துவக்குகிறார். அதற்காக சிவபெருமானை வணங்கும் பொருட்டு லிங்கத்திருமேனி மீது சூரியக்கதிர்கள் விழுகின்றன என்பது ஐதீகம். இன்னும் மூன்று நாட்கள் வரை இந்த அதிசயம் நிகழும். இந்த நேரத்தில் அவிநாசியப்பரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் என்றனர்.