பழநி :பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 22 முதல் மார்ச் 31 வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.மார்ச் 22 காலை 9:20 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். மார்ச் 27 ல் திருக்கல்யாணம், 28 ல் தேரோட்டம் நடைபெறும். மார்ச் 31 ல் விழா நிறைவடையும்.விழாவில் பக்தர்கள் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கழிப்பறை, மருத்துவ வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்படும்.முன்பதிவு செய்ய ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் தகவல் மையங்கள் அமைக்கப்படும். அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் இரண்டு தொலைபேசி எண்களில் (04545--240293, 241293) தொடர்பு கொள்ளலாம். தவிர, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 9965ம் உள்ளது.விழாநாளில் 25 ஆயிரம் பக்தர்களுக்கு மிகாமல் குழுவாக இடைவெளிவிட்டு மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவர். முதியோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வரக்கூடாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.