‘‘கலப்பையின் மேல் தன் கைகளை வைத்தபின் உழைக்கத் தயங்கும் எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவன் அல்ல’’ என்கிறது பைபிள். வயலில் கால் வைத்து எருதுகளை ஓட்ட ஆரம்பித்து விட்டால், அது எவ்வளவு பாழ்பட்ட நிலமாக இருந்தாலும் உழுதே தீர வேண்டும். முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது. செயலில் இறங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். பின்னர் தடைகள் குறுக்கிட்டாலும் தயங்காமல் முறியடிக்க வேண்டும். மன்னர் ஒருவர் படைகளை எதிரி நாட்டுக்கு போரிட அனுப்பினார். இரு நாட்டையும் ஆற்றுப்பாலம் ஒன்று பிரித்தது. பாலத்தைக் கடந்து சென்ற படைகள் எதிரிப்படையுன் மோதின. எதிரிகள் பலமாக இருந்ததால், மன்னரின் படை திணறியது. பாலத்தின் வழியே புறமுதுகிட்டு தாய்நாட்டுக்கு திரும்பி வந்தனர். மன்னருக்கு அவமானம் தாங்கவில்லை. படைத்தலைவனை அழைத்து, ‘‘ மீண்டும் எதிரிநாட்டு மீது படையெடுத்துப் போ. எனக்குத் தேவை எதிரியின் தலை’’ என்றார் மன்னர். படைத்தலைவன் சம்மதித்தான். ஆனால் வீரர்கள் மீண்டும் புறமுதுகிட்டு திரும்பினர். . கோபத்தின் உச்சிக்கு போன மன்னர், ‘‘ இனி இந்த கோழை படைத்தலைவன் தேவையில்லை. நானே போருக்கு தலைமை ஏற்கிறேன்’’ என்றார். பாலத்தைக் கடந்து எதிரி நாட்டுக்குள் படைகள் நுழைந்தன. எதிரிக்குப் பயந்து வீரர்கள் பாலத்தை நோக்கி ஓடத் தொடங்கினர். சட்டென யோசித்த மன்னர் பாலத்தின் மீது குண்டு வீசித் தாக்கினார். எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வீரர்களுக்கு ஏற்பட்டது. ஆவேசமுடன் போரிட்டு எதிரிகளை திண்டாடச் செய்தனர். எதிரி மன்னன் பிடிபட்டான்.