மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2021 05:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று மாசி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருத்தேர் விழாவில் பக்தர்களுக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 13ம் தேதி மயானக்கொள்ளையும், 16ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது.ஏழாம் நாளான இன்று மாலை 3:00 மணிக்கு முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. மேல்மலையனுார் கோவில் புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் பார்வதி தேவியின் அம்சமான அங்காளம்மனின் கோபத்தை தனிக்க தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக இருந்து விழா எடுக்கின்றனர். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர் வடிவமைத்து விழா நடைபெறும். இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி புதிதாக தேர் வடிவமைத்துள்ளனர். நடந்த மாசி திருத்தேர் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்தனர். விழாவில் பக்தர்களுக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.