பதிவு செய்த நாள்
19
மார்
2021
05:03
அரூர்: அரூர் அருகே, 16 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியில், அலங்கரித்த தேரில், சுவாமிகளை வைத்து, கிராம மக்கள் தெப்ப தேரோட்டம் நடத்தினர்.
அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் உள்ள, மணவாளன் குட்டை ஏரி, நடப்பாண்டு, பெய்த மழையால், 16 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. இதையடுத்து நேற்று, அலங்கரிக்கப்பட்ட தேரில், காட்டு வேடியப்பன், மணவாளன் குட்டை வேடியப்பன், மாரியம்மன் ஆகிய சுவாமிகள் மற்றும் நீர் நிரம்பிய கரகம் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஏரியில் தெப்ப தேரோட்டம் நடந்தது. இதில், கௌாப்பாறை, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த காலங்களில், ஏரி நிரம்பும்போது, அலங்கரித்த தேரில், சுவாமிகளை வைத்து, முன்னோர்கள் தெப்ப தேரோட்டம் நடத்தினர். இதனால், மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக இருந்தது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின், ஏரி நிரம்பியதால், முன்னோர்கள் வழியில், நாங்களும் தெப்ப தேரோட்டம் நடத்தினோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.