பதிவு செய்த நாள்
20
மார்
2021
06:03
திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த மாதம் விடுதலையாகி, சென்னையில், அவரது அண்ணி இளவரசி வீட்டில் தங்கி இருந்தார். 40 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று காலை, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலுக்கு அவர் வந்தார். சசிகலாவுக்கு, ரெங்கா ரெங்கா கோபுர வாசலில், அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து, பேட்டரி கார் மூலம் கோவிலுக்குள் சென்ற சசிகலாவை, கோவில் பட்டர்கள் வரவேற்று, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஸ்ரீரங்கம் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளரும், திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான், பிரசாரத்திற்கு இடையே, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று, சசிகலாவை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்த சசிகலா, மீண்டும் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். வேட்பாளர்கள் ஆசி: நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருளானந்தம்மாள் நகரில் இருந்த சசிகலாவை, தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சந்தித்து, ஆசி பெற்றனர்.