பதிவு செய்த நாள்
26
மார்
2021 
01:03
 
 திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம், நேற்று, ஆரூரா தியாகேசா கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவு பெருமை பெற்றது என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது, ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரியது. தேரின் உயரம் 96 அடி; எடை 350 டன்.திருச்சி, பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமயமாக்கி, ஹைட்ராலிக் பிரேக் அமைத்துள்ளது. கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு காரணமாக, தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த, 1990, 1991ம் ஆண்டுகளில், ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடந்தது. அதன்பின், நடப்பு ஆண்டு தான், ஆயில்ய நட்சத்திரத்தில் , தேரோட்டம் நடந்தது.முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தேரில், தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.
சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. காலை, 7:38 மணிக்கு, கலெக்டர் சாந்தா தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆரூரா... தியாகேசா கோஷங்கள் முழங்க தேரை இழுத்தனர்.ஆடி அசைந்த நிலையில் புறப்பட்ட ஆழித்தேர், பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. கீழ ரதவீதியில் கிளம்பிய ஆழித்தேர், இரவு, 7:20 மணிக்கு நிலையை அடைந்தது.