மண்ணடி - மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவிலில், பங்குனி தேர் திருவிழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது. மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஐந்தாம் நாள் இரவு, அம்பாள் தங்க முலாம் ரிஷப வாகனத்திலும், சுவாமி வெள்ளிவிடை ஏறி, 63 நாயன்மார்களுக்கும் தரிசனம் அளித்தவாறு, மாட வீதிகளில் உலா வந்தார். இது, தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பாகும். பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வைபவம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து, இறையருள் பெற்றனர்.இது குறித்து, சிவனடியார் சேவை சங்கத்தினர் கூறியதாவது: திருத்தேர் வைபவம், சிவனடியார் சேவா சங்கம் சார்பில், 13 ஆண்டுகளாக, வெற்றிகரமாக நடந்து வருகிறது. சுவாமி மல்லிகேஸ்வரர், பெரும்பாலான தாய்மார்களுக்கு, ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார். அதை நினைவு கூரும் வகையில், திருத்தேர் அமைந்துள்ளது சிறப்பாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.