பதிவு செய்த நாள்
26
மார்
2021 
02:03
 
  சென்னை - மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில், பங்குனி மாதப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழா, ஆண்டுதோறும், 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.நேற்று அதிகாலை, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, தம்பதி சமேதராக, தேரில் எழுந்தருளினர்.காலை, 8:45 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். பஞ்ச மூர்த்தி புறப்பாட்டுடன், நான்கு மாட வீதிகளிலும், தேரில் கபாலீஸ்வரர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதியம், 12:00 மணிக்கு, தேர், நிலைக்கு வந்தது. மாலை, தேரில் இருந்து கோவிலுக்கு, கபாலீஸ்வரர் எழுந்தருளினார்.இதையடுத்து, யானை வாகனங்களில், ஐந்திருமேனிகள் விழா நடந்தது. பிரதான நிகழ்வாக இன்று, திருஞான சம்பந்தர் அங்கம் பூம்பாவையை உயிர்ப்பித்தல், வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளித்தல் விழா நடக்கிறது.மருந்தீஸ்வரர் கோவிலில் தேர்சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, சந்திரசேகரர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.காலை, 5:45 மணிக்கு, பக்தர்களால், தேர், வடம் பிடித்து இழுக்கப்பட்டது. காலை, 9:30 மணிக்கு, தேர், நிலைக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அருளைப் பெற்றனர்.இன்று, பரிவேட்டை விழா நடக்கிறது. 27ம் தேதி கல்யாணசுந்தர் திருக்கல்யாணம், விமானக்காட்சி, அகத்தியருக்கு திருமணக் காட்சி, வன்னிமரக் காட்சி ஆகியவை நடக்கின்றன.வரும், 28ம் தேதி, திரிபுரசுந்தரி, தியாகராஜ சுவாமி திருமண விழா, கொடியிறக்கம், வால்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி, வீடுபேறு அளித்தல் நடக்கிறது.