திருப்பரங்குன்றம். பாடல் பெற்ற சிவத்தலமாகவும், முருகனின் அறுபடைவீடுகளில் முதல் தலமாகவும் உள்ளது. வடதிசை நோக்கி அமைந்துள்ள குடைவரைக் கோயிலான இங்கு, சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பவளக்கனிவாய்ப் பெருமாள் மேற்குநோக்கியும், கற்பகவிநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்குநோக்கியும் அருள்பாலிக்கின்றனர். தனியாக கோவர்த்தனாம்பிகை சன்னதி உள்ளது. தெய்வானை திருமண வைபவத்தைக் காண மும்மூர்த்திகள், துவாதச ஆதித்தியர், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அஷ்டதிக் பாலகர்கள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கூடியதால் இத்தலம் கயிலாயத்திற்கு ஈடானதாகும். சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இம்மலை சிவலிங்கமாக காட்சியளிப்பதாக பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையை நக்கீரர் இங்குள்ள முருகன் மீது பாடினார்.