பதிவு செய்த நாள்
29
மார்
2021
05:03
விழுப்புரம் : பங்குனி உத்திரத்தையொட்டி, விழுப்புரம் பகுதியில் உள்ள முருகர் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், செடல் போட்டும், அலகு போட்டும் கனரக வாகனங்களை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழுப்புரம், அகரம் பாட்டை, முத்தோப்பு பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி, நேற்று காலை பாலமுருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து வெற்றிவேல் வீதியுலா, செடல் உற்சவம் நடைபெற்றது.வெற்றிவேலுக்கு மிளகாய்பொடி, கற்பூர அபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் பலர் வேண்டுதலையொட்டி, மிளகாய், கற்பூரம் அபிஷேகம் செய்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அலகு போட்டு டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், கிரேனில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7.00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.