பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது
திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று (30ம் தேதி) குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை 4 : 00 மணிக்கு அம்மனுக்கு அலங்காரத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, காப்புக் கட்டிய பூசாரிகள் கை குண்டம் வாரி இறைத்து குண்டம் இறங்கினர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. 8 : 00 மணிக்கு குண்டம் மூடுதல், அம்மனுக்கு சிறப்பு அக்கி அபிஷேகம், அபிஷேக ஆராதனை, அம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு. மதியம் 2 : 00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேரில் வீதி உலா வருதல். 3 : 00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை 31 ம் தேதி மற்றும் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தினசரி காலை 7 : 30 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வருதல். மாலை 7 : 00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவில், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால் பக்தர்கள் மிக குறைவாகவே காணப்பட்டனர். வரிசையாக சென்று அம்மனை தரிசிக்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு சுகாதார துறை சார்பில், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே தரிசிக்க அணிவிக்கப்பட்டது. அவிநாசி டி.எஸ்.பி பாஸ்கர், மேற்பார்வையில், பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தலைமையில், ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீசார் ஊர்காவல்படை ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.