பதிவு செய்த நாள்
01
ஏப்
2021
11:04
மேட்டுப்பாளையம்: ஊமப்பாளையம் குண்டத்து காளியாதேவி கோவிலில், நேற்று குண்டம் திருவிழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் 32 ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம், 16 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து குண்டம் திறத்தல், அம்மன் அழைத்தல், விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னிச்சட்டிகளும் அழைத்து வரப்பட்டனர். பின்பு குண்டம் திறந்து பூ வளர்த்து, அலகு குத்தி பக்தர்கள் வந்தனர். அதை தொடர்ந்து நேற்று காலை, பவானி ஆற்றிலிருந்து, கோவிலுக்கு அம்மன் சுவாமியை அலங்காரம் செய்து சப்பரத்தில் எடுத்து வந்தனர். காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் தலைமை பூசாரி பழனிசாமி குண்டத்தை வலம் வந்து, மலர் பந்தை உருட்டி விட்டார். அதை தொடர்ந்து, பூசாரிகள் அருளுடன் குண்டத்தில் இறங்கினர். அவரைத் தொடர்ந்து அருள்வாக்கு பூசாரி காளியம்மாள், முருகேசன், ரங்கராஜ் உட்பட அளவு குத்திய பக்தர்களும், ஆண்களும், பெண்களும் குண்டம் இறங்கினர்.
இவ்விழாவில் ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், வார்டு கவுன்சிலர்கள் உஷாதேவி, விஜயலட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மன், மகா முனீஸ்வரருக்கு அக்னி அபிஷேகமும், மஞ்சள் நீராட்டு, பொங்கல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை அம்மனுக்கு, 108 இளநீர் அபிஷேக அலங்கார பூஜையும், 5 ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.