பதிவு செய்த நாள்
01
ஏப்
2021
11:04
பூந்தமல்லி- பூந்தமல்லி, சவீதா மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட, 40 அடி உயர, பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.
பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில், சவீதா மருத்துவக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரி வளாகத்தில், ஒரே பாறையில், 40 அடி உயரம் கொண்ட, பாலமுருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ரத்னகிரி பாலமுருகன் அடிகளார் மற்றும் சவீதா மருத்துவக் கல்லுாரி தாளாளர் வீரய்யன் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலை, நாட்டில் உள்ள முருகன் சிலைகளிலேயே, மிகப் பெரியதாகும். 40 அடி உயரம் கொண்ட பாலமுருகன் சிலையை சுற்றி, 21 அடி உயரத்தில், செயற்கை மலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிலையின் கீழ் பகுதியில், தியான மண்டபமும் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று காலை, 10:00 மணிக்கு, ரத்னகிரி பாலமுருகன் அடிகளார் தலைமையில், சிறப்பாக நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், இவ்விழாவில், குன்றக்குடி பொன்னம்பல, சிவஞான பாலய, சாந்தலிங்க மருதாசல, குமரகுருபர மற்றும் ஊரன் அடிகளார்கள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கனோர் கலந்துக்கொண்டு, பாலமுருகன் தரிசனம் பெற்றனர்.