திருப்பதி : திருமலை திருப்பதி பெருமாளை வி.ஐ.பி.,தரிசனம்,சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் ஆகிய மூன்று முறைகளில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வி.ஐ.பி.,தரிசனம் அமைச்சர்கள் உயரதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்களுக்கு மட்டுமானது.
முன்னுாறு ரூபாய் கட்டணம் செலுத்தி செல்லும் சிறப்பு தரிசனம் தான் பெரும்பாலான பக்தர்கள் செல்வர். கட்டணமில்லாத சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்தில் பெருமாளை தரிசிக்க நீண்ட நேரமாகும். மேலும் ஒரு நாளைக்கு 23 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பர். ஆந்திரா மாநிலத்திலும் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து 23 ஆயிரம் பக்தர்கள் என்றிருந்த எண்ணிக்கையை 15 ஆயிரமாக குறைத்து கடந்த சில நாளாக அனுமதித்து வந்தனர். இப்போது இலவச தரிசனத்தை முற்றிலுமாக ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வருகின்ற 12 ந்தேதி திங்கட்கிழமை முதல் இலவச தரிசனம் கிடையாது. முன்னுாறு ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.