பதிவு செய்த நாள்
08
ஏப்
2021
04:04
அன்னை மீனாட்சியின் மூன்று தனங்களுடன் (மார்பு) பிறந்தாள் என புராணம் சொல்கிறது. இயற்கைக்கு மாறான இந்த அமைப்பு ஏன் என்ற கேள்வி எல்லார் மனதிலும் உள்ளது. பூலோகத்துக்கு வரும் சிவபெருமானை அடையாளம் காண்பதற்காக, ஒரு தனம் கூடுதலாக அன்னைக்கு அமைந்தது என்பது அறிந்த செய்தி. ஆனால், இதற்குள் ஒரு தத்துவமும் புதைந்து கிடக்கிறது. சிவபெருமான் முக்கண்ணனை உடையவர். அதில் ஒன்று நெற்றியில் இருக்கிறது. நெற்றியில் இருந்தே ஞானம் பிறக்கிறது. தேர்வு எழுதும் மாணவனுக்கு படித்தது மறந்து டவ்டால், பென்சிலால் நெற்றியில் தட்டிக் கொள்வான். காரணம், படித்ததை நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காக ! ஆக, ஞானம் என்பது நெற்றியில் இருந்தே உருவாகிறது. இதனால் தான், நெற்றியில் சிவனுக்கு ஞானக்கண் அமைந்தது.
இந்த கண்கள் நெருப்பைக் கக்கும் என அஞ்சுகிறோம். ஆனால், இந்த நெருப்பு யாரை என்ன செய்தது ? இங்கிருந்து தான் முருகன் உற்பத்தியானான். இந்த கண்கள் தான் நக்கீரரை எரித்து, அவரது புலமைத்திறனை வெளியுலகுக்கு அறிவித்தது. மன்மதனை எரித்ததன் மூலம், சிற்றின்பம் என்பது கொடிய வியாதி என்பதை மக்களுக்கு தெரிவித்தது. திரிபுரங்களை எரித்த, அசுரர்களை அழித்ததன் மூலம், மனதிலுள்ள அகம்பாவம் என்ற அசுரனை அழிக்க வேண்டும் என்ற எடுத்துக் காட்டியது. ஆக, இந்தக் கண் நல்லதை மட்டுமே பூமிக்கு செய்திருக்கிறது. மனிதர்களுக்கும் ஞானக்கண் இருக்கிறது. அதுவே அவனுடைய சிந்தனை. அந்த சிந்தனை நெற்றிப் பொட்டில் இருந்தே கிளம்புகிறது. அதுவே மøதை செயல்படுத்துகிறது. அப்படி எழும் சிந்தனை நல்லதாக, கடவுளுக்கு பயந்ததாக அமைந்தால் அவனது வாழக்கை சிறப்பாக அமையும். சுவாமிக்கு மூன்று கண் இருக்கும் போது, அன்னைக்கு மூன்றாவதாக ஏதாவது வேண்டாமா ? அதனால் தான் பெண்மைக்கே இலக்கணமான தனம் அம்பிகைக்கு அமைந்தது. அவளது வழக்கமான இரண்டு தனங்களும் உலக உயிர்களுக்கு உணவூட்டுகின்றன அல்லது அருளை வாரி வழங்குகிறான். நடுவிலுள்ள தனம் ஞான அறிவைத் தருகிறது. உன் இதயத்தை தொட்டுப்பார்த்து நடந்து கொள், மனசாட்சியின் படி செயல்படு என்ற அறிவுரையை நமக்கு சொல்கிறது. சிவனை பார்த்தவுடன் அந்த தனம் மறைந்து விட்டதே ! அப்படியானால், ஞானம் தரும் சக்தியை அன்னை இழந்து விட்டாளா என்று அடுத்து ஒரு கேள்வி எழக்கூடாது. அவள் சிவனுக்குள் ஐக்கியமாகி விட்டாள். இருவரும் ஓருடலாய் ஆனபிறகு, அவளுக்கு கூடுதல் தனம் தேவைப்படவில்லை. இருவருமாய் இணைந்து, நமக்கு ஞானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.