விஸ்வரூபன் என்ற அசுரகுருவின் தந்தையான துவட்டா, இந்திரனை அழிக்க எண்ணி, விருத்திரன் எனும் அசுரனை அனுப்பினான். அவனை இந்திரன் அழித்துவிட்டான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இந்த சாபம் நீங்க, பூலோகத்தில் சிவதலயாத்திரை செய்யும்படியும், எந்த இடத்தில் கால் வைக்கும்போது விலகுகிறதோ அங்கே சிவலிங்க பூஜை செய்யும்படியும் கூறினார் இந்திரனின் குரு பிரகஸ்பதி. இந்திரன் பூலோகத்திலுள்ள கடம்பவனத்திற்கு வந்தபோது, அங்கு வீசிய காற்றில் அவனது உடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. அவனது தோஷமும் நீங்கி புத்துணர்வு பெற்றான். அந்த வனத்தின் மத்தியில் தங்கத்தாமரைகள் நிறைந்த குளத்தையும், அருகில் ஒரு லிங்கம் இருந்ததையும் கண்டான். லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். பின் தேவசிற்பியான மயனை வரவழைத்து, இவ்விடத்தில் சுவாமிக்கு தனது வாகனமாக ஐராவதம் (வெள்ளையானை) தாங்கும்படியாக, இந்திரவிமானம் அமைத்து சுற்றிலும் கோயில் எழுப்பினான். அதுவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலானது. அந்த நன்னாள் சித்ரா புவுர்ணமி நாளாக அமைந்தது. ஒவ்வொரு சித்ராபவுர்ணமியன்றும் உச்சிக்காலத்தில் அவன், சிவனை வணங்குவதாக ஐதீகம்.