பூக்குழி திருவிழா நடத்த வேண்டும்; எதிர்பார்ப்பில் ஸ்ரீவி. பெரிய மாரியம்மன் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2021 04:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி விழாவை வழக்கம்போல் நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வருடந்தோறும் பங்குனி மாதம் 13 நாட்கள் இக்கோயிலில் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். கடந்த வருடம் கொடியேறி ஏழு நாட்கள் திருவிழாக்கள் நடந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பூக்குழி திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 31 அன்று கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. ஆனால், கொரனோ காரணமாக பூக்குழி திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் பக்தர்கள் மனதில் எழுந்தது. இருந்தபோதிலும் நேற்றுவரை திருவிழாக்கள் நடந்தன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கோயில் விழாக்களை நடத்த தடைவிதித்து நேற்று உத்தரவிட்டது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடக்குமா என்ற எதிர்பார்ப்பு அம்மன் பக்தர்களிடம் எழுந்துள்ளது. கலெக்டரின் சிறப்பு அனுமதி பெற்று பூக்குழி திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரிய மாரியம்மன் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.