பதிவு செய்த நாள்
11
ஏப்
2021
12:04
மதுரை : கொரோனா தொற்று பரவல் காரணமாக, மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடை இன்றி சித்திரை திருவிழா நடத்த, அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டு உள்ளது. மதுரை சித்திரை திருவிழா என்றாலே, மீனாட்சி திருக்கல்யாணமும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் தான், ஹைலைட்! எந்த பேதமுமின்றி, லட்சக்கணக்கில் மக்கள் கூடி திருவிழாவை கொண்டாடுவர்.
பங்கேற்க கட்டுப்பாடு: கடந்தாண்டு கொரோனா தொற்று பரவலால், இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது, பக்தர்களை வேதனை அடையச் செய்தது.அதேநேரம், சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணத்தை மையப்படுத்தியே நடக்கும் என்பதால், திருக்கல்யாணம் மட்டும், கோவில் உற்சவர் சன்னதியில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இதை, ஆன்லைனில் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கள்ளழகர் கோவிலில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில், அழகர் இறங்கினார். இதையும், பக்தர்கள் ஆன்லைனில் கண்டு தரிசித்தனர். கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததும், செப்டம்பரில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. நேற்று முதல் பக்தர்கள் இரவு, 8:00 மணி வரை மட்டுமே கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா, பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகள்: இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழா, ஏப்., 15 முதல், 25 வரை நடக்கிறது. பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற முக்கிய விழாக்களை, பக்தர்களின்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகமவிதிப்படி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, இந்நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என, அரசின் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சனுக்கு, கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கடிதம் எழுதியுள்ளார்.கடந்தாண்டு, துரதிர்ஷ்டவசமாக நிலவிய சூழலால், விழாவை கோவில் நிர்வாகம் கொண்டாட முடியவில்லை. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்தாண்டு ஆகமவிதிப்படி, திருவிழா பூஜைகளை செய்ய, பட்டர்கள் ஆர்வமாக உள்ளனர். கோவில் வளாகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.