பதிவு செய்த நாள்
11
ஏப்
2021
01:04
சபரிமலை: சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்தார். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகத்தை துவக்கி வைப்பார். பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஏப்., 18 வரை தினமும் காலை முதல் இரவு வரை கணபதி ஹோமம், உதயாஸ்தமன பூஜை, உஷபூஜை, உச்சபூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவு படிபூஜை, அத்தாழபூஜை நடைபெறும்.
ஏப்., 14 காலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷுக்கனி தரிசனம் நடைபெறும். ஏப்., 18 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இன்று முதல், 18ம் தேதி வரை தினமும், 10 ஆயிரம் பக்தர்களுக்கு, ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும்.