பதிவு செய்த நாள்
11
ஏப்
2021
01:04
அருப்புக்கோட்டை: நரிக்குடி அருகே இருஞ்சிறையில் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ள பழமையான அய்யனார் கோயிலில் நடந்த கள ஆய்வில் 12ம் நாற்றாண்டு கால அய்யனார் சிலை கண்டெடுத்ததாக, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்லபாண்டியன் , பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கள ஆய்வு செய்த நிலையில், செல்லபாண்டியன் கூறினார்.அவர்கள் மேலும் கூறியதாவது: இச்சிலை இடைக்கால பாண்டியர்களின் காலகட்டத்தை சேர்ந்ததாகும். இடைக்கால பாண்டியர்களின் காலம் கி.பி., 960 முதல் 1230 வரையாகும். சிலையின் தலையை கிரீடத்துடன் கூடிய அடர்த்தியான ஜடா பாரம் அலங்கரிக்கிறது. இரு காதுகளில் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள், முகம் வட்ட வடிவமாகவும், எடுப்பான நாசி, தடித்த உதடுகளை உடைய திருவாய் அகன்ற தோலுடன் காட்சியளிக்கிறது. கைகளின் மேல் புஜங்களில் உருளை வடிவுடைய தோல் வளைவுகள், முன்னங் கைகளில் கை வளைவுகளும் உள்ளன. மார்பில் அணிகலன்கள் , முப்புரி நுாலோடு, மார்பு சற்றே விரிந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். வலது கரம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இடுப்பையும் இடது காலையும் இணைத்து யோக பட்டை காணப்படுகிறது. வலது காலை மடித்து, இடது காலை நீட்டியும் உட் குதியாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். இடைக்கால பாண்டியர்களின் இது போன்ற கலைப்படைப்புகள் காண்போரின் கண்களையும், கருத்துக்களையும் கவரும் விதத்தில் இருக்கும்,என்றார்.