சிங்கம்புணரி: பிரான்மலை கோயில் திருவிழா தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடக்காததால் அப்பகுதி மக்களும் பக்தர்களும் கவலையில் உள்ளனர்.
சங்க இலக்கியத்தில் பாடல் பெற்றதும் பாண்டியநாட்டு 14 ஆவது திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரியதுமான பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயிலுக்கு திருக்கொடுங்குன்றம் என்ற பெயரும் உண்டு. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2011 ல் பாலாலயம் செய்யப்பட்டது. இதனால் அந்த ஆண்டு முதல் திருவிழா நிறுத்தப்பட்டது. திருப்பணி வேலைகள் தாமதமாகி கும்பாபிஷேகம் கடந்த 2019 செப். 12 ல் தான் நடந்தது. அதுவரை திருவிழா நடக்காக நிலையில் கும்பாபிஷேகம் முடிந்தபிறகு 2020 ல் நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனல் கொரோனா பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா ரத்தானது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் மன வேதனைக்கு ஆளாகினர். இந்நிலையில் பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தநிலையில் இந்த ஆண்டு நிச்சயம் திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் மீண்டும் பலத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். வருகின்ற ஏப். 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கவிருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக திரு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களும், பக்தர்களும் சொல்ல முடியாத வேதனையில் உள்ளனர். மதுரை சித்திரைத் திருவிழாவை போன்று பிரான்மலை கோயிலிலும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் திருவிழாவை நடத்த அரசும், கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.