மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2021 02:04
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் தமிழகம்மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.கொரோனா நோய் பரவலை தடுக்கும்பொருட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 12 மாதங்களுக்கு அனைத்து உற்சவத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது.கடந்த மார்ச் மாதம் தளர்வு அறிவித்த நிலையில் இந்த கோவிலின் பிரசித்தி பெற்றமாசித்தேர் உற்சவம் வழக்கம் போல் நடந்து முடிந்தது.
இந்த மாதம் மீண்டும் தமிழக அரசு கோவில் விழாக்களுக்கு தடைவிதித்ததால் நேற்று அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள் வளாகத்தில் நடந்தது.இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு சிவ வாத்தியங்கள், மேள, தாளம் முழங்க கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களைபாடி உற்சவத்தை நடத்தினர்.