பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
03:04
பல்லடம்: அரசு சொல்வதை கேளுங்கள் என, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டின் போது, காமாட்சிபுரி ஆதினம் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நேற்று அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. அதை முன்னிட்டு நடந்த மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் நல்வினை தீவினை என்பது தொடர்கிறது. புண்ணியம் செய்தால் நல்வினையும், பாவங்கள் செய்தால் தீவினையும் தொடரும். மனிதர்களாகிய நாம், புல் பூச்சி, புழு, விலங்குகள், பறவை உள்ளிட்ட ஏழு வகையான பிறப்புகளை எடுக்கின்றோம். பாவங்கள் செய்யும் போது, மீண்டும் மீண்டும் அதே பிறவி கிடைக்கும். இறை வழிபாடு ஒன்றே மனித பிறப்பின் நோக்கம். கணவன்- மனைவி இருவரும் தங்களை ஒருக்கொருவர் தெய்வமாக நினைத்து வாழ வேண்டும்.
தாய், தந்தை, கணவன், மனைவியின் சாபம் பெற்றால் அதற்கு பிராயச்சித்தமே இல்லை. எனவே, நாம் அனைவரும் தெய்வீக வாழ்க்கை வாழவேண்டும். இறந்தவர்களின் ஆன்மா ஒவ்வொரு அமாவாசையின் போதும் பூமிக்கு வருவதாக ஐதீகம். அன்று முன்னோர்களையும் இறைவனையும் வழிபடும்போது அவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். கஷ்டம் வந்தால் மட்டுமே கடவுளை நினைக்கக் கூடாது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அரசு சொல்லும் வழிமுறைகளை அனைவரும் கேட்டு நடக்கவேண்டும். நோய் தொற்றை தடுக்கும் வகையில் அனைவரும் பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள் என்றார்.