கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா துவக்கம்: தேரோட்டம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2021 03:04
தஞ்சாவூர்: கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு பத்துநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்னக அயோத்தி என போற்றப்படும் இக்கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் ராமபிரான் பட்டாபிஷேக மூர்த்தியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் ராமநவமி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கொரோனா பரவலை தொடர்ந்து, ராமநவமி விழாவை எளிய முறையில் நடத்திட கோவில் நிர்வாகம் முன் வந்தது. இதையடுத்து, இன்று(13ம் தேதி) தங்க கொடி மரத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. அப்போது உற்சவர் ராமபிரான், சீதை, லெட்சுமணன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய விழாவான வரும் ஏப்.21ம் தேதி நடைபெற இருந்த, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் கோவிலுக்குள் குறைவான பக்தர்களை அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.